கூட்டணி தர்மத்தைக் கடைபிடிப்பாரா ராமதாஸ்? தேமுதிகவைக் குழப்பும் கடந்தகால வரலாறு!
அதிமுக கூட்டணிக்குள் பாமக இருந்தால், தேமுதிகவுக்கு வெற்றி கிடைக்குமா என அக்கட்சியினர் விவாதம் செய்து வருகின்றனர். இதைப் பற்றிப் பேசும் அக்கட்சி பிரமுகர்கள், ' மோடி அலை வீசிய 2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக நிறுத்திய 14 வேட்பாளர்களில் வன்னியர்கள் யாரும் இல்லை.
கூட்டணி தர்மத்துக்கேற்ப நடந்து கொண்டார் விஜயகாந்த். ஆனால் அந்தத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை. அதே நேரம் தருமபுரியில் அன்புமணியின் வெற்றியை கேப்டன் உறுதி செய்தார்.
இந்தமுறையும் ராமதாஸ், தேமுதிகவுக்கு ஆதரவாக எந்தப் பிரசாரமும் செய்ய மாட்டார். அவர் கட்சியின் வேட்பாளர்கள் ஜெயிப்பதற்காக, செல்வாக்கான தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொள்வார்.
அவர்களைப் போல நமக்கு தலித் எதிர்ப்பு வாக்குகள் இல்லை. மாநிலம் முழுவதும் கேப்டனுக்கான பாசிட்டிவ் வாக்குகள் அதிகம். நம்முடைய வாக்குகளும் பாமகவுக்குப் போகும்.
நாம் தோற்பதைத்தான் ராமதாஸும் விரும்புவார். விருத்தாசலத்தில் நாம் கொடுத்த அடி அப்படி. இந்தமுறை நமக்கான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருக்க வேண்டும்' என தேமுதிக தலைமைக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.
இதே அலெர்ட்டில் பிரேமலதாவும் இருக்கிறாராம். கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதி வடிவத்துக்கு வரும்போது மோதல்கள் வெடிக்கலாம் என்கிறார்கள் கேப்டன் கட்சி பொறுப்பாளர்கள். - எழில் பிரதீபன்