மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் போராட்டம் தொடர்கிறது - டெல்லியில் இன்று முதல் 2 நாள் தர்ணா!
மத்திய அரசைக் கண்டித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல் 2 நாட்களுக்கு தர்ணா போராட்டம் நடத்துகிறார்.
சிபிஐ நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த வாரம் கொல்கத்தாவில் 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். தொடர்ந்து டெல்லியிலும் கூட்டாட்சி மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற கோஷத்துடன் டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு தர்ணா போராட்டத்தை தொடங்குகிறார். 2 நாள் நடத்தும் இந்த தர்ணா போராட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த திங்கட்கிழமை உண்ணாவிரதம், நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்திய நிலையில் இன்று மம்தாவின் தர்ணா என எதிர்க்கட்சிகளின் போராட்டக்களமாக தலைநகர் டெல்லி மாறியுள்ளது.