5 மணி நேர திக்... திக்... - உச்ச நீதிமன்ற அறையில் சிபிஐ இணை இயக்குநரின் சிறை அனுபவங்கள்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் மற்றும் சிபிஐ சட்ட ஆலோசகர் பாசுரன் ஆகியோர், கோர்ட் அறையின் மூலையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் முதல் பக்க செய்தியாளது. உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானது முதல் நீதிமன்றம் கலையும் வரை நாகேஸ்வர ராவின் 5 மணி நேர திக்... திக்... சிறை அனுபவங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சிபிஐ தற்காலிக இயக்குநர் பொறுப்பில் நாகேஸ்வரராவ் இருந்த போது உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி மற்றொரு இணை இயக்குநராக இருந்த அருண்குமார் சர்மாவை இடமாறுதல் செய்ததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் நேற்று காலை 11 மணிக்கு சிபிஐ சட்ட ஆலோசகர் பாசுரனுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் முன் ஆஜரானார் நாகேஸ்வரராவ்.
தலையைத் தொங்கப் போட்டபடியே நீதிபதிகள் என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்களோ என்ற கவலையுடன் நின்றிருந்தார். 11.45 மணிக்கு வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதிகள் முன் தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாக நாகேஸ்வர ராவ் கெஞ்சினாலும் சாட்டையைச் சுழற்றினர்.
நீதிமன்ற அவமதிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தக்க தண்டனை என்று கூறி 1 நாள் சிறை அதுவும் இந்த கோர்ட் கலையும் வரைக்கும் இங்கேயே இருக்க வேண்டும் என்றும், மேலும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர் நீதிபதிகள். இதனால் முகம் வாடிப்போன நிலையில் நின்று கொண்டே இருந்த நாகேஸ்வரராவை, அறையின் மூலையில் அமருமாறு உத்தரவிட்டனர்.
நாகேஸ்வரராவுக்கு ஆதரவாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எவ்வளவோ வாதாடியும் நீதிபதிகள் கண்டிப்புக் காட்டினர்.இதனால் 11.45 மணிக்கு அறையின் கடைசி வரிசை இருக்கையில் நாகேஸ்வரராவும், பாசுரனும் தலை கவிழ்ந்த படி அமர்ந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்காக நீதிபதிகள் கலைய, சிபிஐ அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் நாகேஸ்வரராவை துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தனர். சில வழக்கறிஞர்கள் பிஸ்கட், தின்பண்டங்கள் கொடுக்க முயல நீதிமன்ற ஊழியர்கள் நோ சொல்லி, வாட்டர் ஒன்லி அலோவ்டு என்று கண்டிப்பு காட்டினர்.
இதனால் தண்ணீர் பாட்டில்களை வரிசையாக கொண்டு வந்து கொடுக்க, தண்ணி குடிச்சா அடிக்கடி டாய்லெட் போகணுமே என்று கூறி நாகேஸ்வர ராவ் மறுத்து விட்டார்.
கோர்ட் அறையில் மாட்டப்பட்டிருந்த நீதிபதிகளின் படங்களை பார்த்தபடி அமைதியாக உட்கார்ந் திருந்த நாகேஸ்வரராவிடம் ஒரு வழக்கறிஞர், உங்களைப் போன்றே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்தியாவின் பெரும் தொழிலதிபர் அனில் அம்பானியும் கோர்ட்டுக்கு வந்துள்ள தாகக் கூற, சிவிலா, கிரிமினலா என்று கேட்டு விட்டு, இது நீதிமன்ற அவமதிப்பு சீசன் போலும் என்றும் கமெண்ட் அடித்தாராம்.
மீண்டும் நீதிபதிகள் வழக்கு விசாரணை தொடர, 3.45 மணியளவில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், நீதிபதிகளிடம் இன்னுமாவது கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தார். முடியாது என்ற நீதிபதிகள், மேலும் வற்புறுத்தினால் தண்டனையை நாளை வரை நீட்டித்து விடுவோம் என்று எச்சரித்தனர்.
இதனால் கோர்ட் நடவடிக்கை முடிந்தும் அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்த நாகேஸ்வரராவை, கோர்ட் ஊழியர்கள் வெளியே செல்லலாம் என்று கூறிய பிறகே வெளியேறினார்.
நாட்டின் உயர்ந்த அமைப்பான சிபிஐயின் தலைமைப் பொறுப்பு அதிகாரியின் ஒருநாள் சிறை அனுபவம் நிச்சயம் அவரது வாழ்நாளில் மறக்க முடியாததாகவே இருந்திருக்கும்.