தேர்தலைக் கண்டு பயப்படுவது யார்?- தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று தேர்தல், கூட்டணி தொடர்பாக கடும் வாக்குவாதம் நடந்தது. காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி, தேர்தல் பயம் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுகிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை என்றார்.
இதற்கு அமைச்சர் வேலுமணி பதிலளிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு காரணம் திமுகதான். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயார் நிலையில் உள்ளது என்றார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு திமுக தான் காரணம் என்பதனை மறுத்து அதிமுகவை குற்றம் சாட்டினார்.
தற்போது நடக்கும் அரசு ஜெயலலிதாவின் செல்வாக்கால் அமைந்த அரசு .அவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு செல்வாக்கு குறைந்து விட்டது. இதனாலேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது என்றார் ராமசாமி.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கிட்டு, ஜெயலலிதா செல்வாக்கில் அமைந்த ஆட்சி என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தேர்தலைக் கண்டு பயப்படவில்லை என்றார்.
திமுக தலைமையிலான வலுவான கூட்டணி தமிழகத்தில் அமைந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு தவிக்கிறது, தனித்து நிற்கத் தயாரா? என்றார் ராமசாமி. அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தனித்து நிற்கத் தயாரா? என்று எதிர்க் கேள்வி கேட்ட துடன், தமிழகத்தில் கட்சிகள் எல்லாம் தனித்து நிற்க தயார் என்றால் அதிமுகவும் தயார் என்றார். இவ்வாறுதேர்தல் தொடர்பான விவாதம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது.