`எச்சரித்தோம் திருந்தவில்லை தீர்த்துக்கட்டிவிட்டோம் - குடும்ப சண்டையில் வக்கீலை கொடூரமாக கொலை செய்த கும்பல்!
சென்னை புழல் அருகே உள்ள சோழவரத்தில் நேற்று முன்தினம் காலை கலைஞர் கருணாநிதி நகர் அருகே சுரேஷ்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிகாலை நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுரேஷ் குமார் விவரம் தெரியவந்தது. அதன்படி, சோழவரம் ஒன்றியம் சிவந்தி ஆதித்தன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). வழக்கறிஞரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியிழும் பதவி வகித்து வந்துள்ளார். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு பியூலா (எ) சங்கரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுரேஷ்குமார்.
இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் காலையில் பால்வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் சுரேஷ்குமார். அப்போது 3 பைக்கில் வந்த கும்பல், சுரேஷ்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இருப்பினும் அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியாமல் போலீஸார் முழித்துக்கொண்டிருந்த வேளையில் தான் அதேபகுதியைச் சேர்ந்த மாரியப்பன், சரத்குமார், ஜான்சன், காமராஜ், சூர்யா ஆகியோர் சுரேஷ்குமாரை கொலை செய்ததாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ``சுரேஷ்குமார் எங்களின் உறவினர் பெண்ணான ரம்யாவை காதலித்து 2வது திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்யாவுடன் சண்டை போட்டுள்ளார் சுரேஷ்குமார். இதனால் ரம்யா கோபித்துக்கொண்டு வீட்டு வந்துவிட்டார். ஆனால் அவரை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு தொடர்ந்து சுரேஷ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அவர் மறுத்துவிடவே, ஒருகட்டத்தில் ரம்யாவை மிரட்டினார். இதனால் இப்படி செய்யாதீர்கள் என அவரை எச்சரித்தோம். ஆனால் எங்கள் மேல் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், எங்களை கொலை செய்ய சுரேஷ் திட்டம் தீட்டியது தெரியவரவே, முந்திக்கொண்டு நாங்கள் அவரை கொலை செய்துவிட்டோம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.