வாராரு.... வாராரு... உடல் நலம் தேறி நாளை மறுதினம் சென்னை வாராரு விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க தேமுதிக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
உடல் நலக்குறைவு காரணமாகவும், தொண்டை பிரச்னை காரணமாகவும் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார் விஜயகாந்த். அவருடைய உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவினாலும் தான் நலமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டு வந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும், மகன் சண்முகபாண்டியனும் தங்கி கவனித்து வந்தனர்.
இந்நிலையில் விஜயகாந்த் உடல் நலம் தேறி விட்டதாகவும் அமெரிக்காவிலிருந்து நாளை மறுதினம் சென்னை திரும்புகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் படு உற்சாகத்தில் உள்ள தேமுதிக தொண்டர்கள் , சென்னை விமான நிலையத்தில் தடபுடல் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. மேலும் பிரச்சாரத்திலும் முன்பு போல் கம்பீரம் காட்டுவாரா ? என்ற ஆவலுடன் விஜயகாந்த் வருகையை தேமுதிக தொண்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.