சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறை தீவிரம்!
உடுமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை பத்திரமாக பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக முதுமலையிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை கண்ணாடிப்பள்ளம் பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளான் சின்னத்தம்பி யானை.. கரும்புக் காட்டுக்குள் மறைவதும், திடீரென வெளியில் தலை காட்டுவதுமாக போக்குக் காட்டி வருகிறான்.
சின்னத்தம்பி யானையை எவ்வித துன்புறுத்தலும் இன்றி பிடிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதால் நேற்று முதல் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானையை மயக்க ஊசி போட்டுத்தான் பத்திரமாக பிடிக்க முடியும் என முடிவெடுத்து முதுமலையிலிருந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப் பட்டுள்ளனர். சின்னத்தம்பியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்த பின் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பியை பிடிக்கும் பணி தொடங்கும்.
இதற்காக 2 கும்கி யானைகளும், ஜேசிபி இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. சின்னத்தம்பிக்கு எவ்வித துன்புறுத்த லோ, காயமோ ஏற்படாமல் பிடிக்க வனத்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளை காண கண்ணாடிப்பள்ளம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.