வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 60 லட்சம் பேரா? - தமிழக அரசு பொய் சொல்வதாக பொது நல வழக்கு!

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவிப்பதாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 11-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு சிறப்பு நிதியாக தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். 60 லட்சம் பேர் யார் என்று கணக்கெடுக்கப்பட்ட பட்டியல் தயாராக உள்ளதாகவும் இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக்கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் கணக்கு தவறாக உள்ளது. திடீரென வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை இரு மடங்கானது எப்படி? என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-19 தமிழக அரசின் பட்ஜெட்டில், தமிழகத்தில் 28.16 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓராண்டுக்குள் அந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயர்ந்தது எப்படி? தேர்தல் நேரத்தில் பொய்க் கணக்கு காட்டி அவசர அவசரமாக மக்களுக்கு வழங்க தமிழக அரசு முயற்சி கொண்டுள்ளதை தடுக்க வேண்டும் என சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கள் மணிக்குமார், சுப்பிரமணியன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.

More News >>