மோடி மீண்டும் பிரதமர் என்ற முலாயம்சிங்கை கொண்டாடும் உ.பி பாஜகவினர் - வாழ்த்து தெரிவித்து போஸ்டர்!
வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் என்று மக்களவையில் பேசிய முலாயம் சிங்குக்கு உ.பியில் பாஜக வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர்.
மக்களவையின் கடைசி நாளான நேற்று, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், தற்போதைய சமாத்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம்சிங் 5 ஆண்டு கால எம்பி பதவிக் காலத்தின் மலரும் நினைவுகளை உருக்கமாகப் பேசினார்.
அப்போது பிரதமர் மோடியை ஓகோவெனப் புகழ்ந்த முலாயம், வரும் தேர்தலிலும் வென்று மோடியே பிரதமராக வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார். முலாய மின் இந்தப் பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த, பாஜகவினரோ முலாயமை கொண்டாடி வருகின்றனர்.
உச்சகட்டமாக உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் பெரிய பெரிய சைஸ் போஸ்டர் அடித்து முலாயமுக்கு நன்றிக்கடன் செய்துள்ளனர். ஒட்டு மொத்த இந்திய மக்கள் 125 கோடி பேரின் எண்ணங்களை பிரதிபலித்து விட்டீர்கள் முலாயம் என்று போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.