`ரஞ்சி போட்டியில் விளையாடாமல் இருந்திருக்கலாம் - கனவுகளை நினைத்து வருந்தும் கம்பீர்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே நேற்று டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது அந்த விழாவில் பேசிய தனது இளமைக்கால கனவுகள் குறித்து மனம் திறந்தார். அதில், ``நான் 12-ம் வகுப்பு முடித்தபின், ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்கலாம். ஏனென்றால் எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ரஞ்சி போட்டியில் விளையாடாமல் இருந்திருந்தால் நிச்சயம் பாதுகாப்பு தேர்வில் பங்கேற்று உறுதியாக ராணுவத்தில் சேர்ந்திருப்பேன்.
நான் முதன் முதலில் ராணுவப் பணியைத்தான் விரும்பினேன். இப்போதும் ராணுவத்தின் மீது, ஆசையாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் இருக்கும் ஒரே வருத்தம் இதுதான். நான் கிரிக்கெட்டில் இணைந்த பிறகு அங்கு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணினேன். முடிந்தவரை அதை சிறப்பாகவே செய்தேன். இருப்பினும், நான் முதலில் விரும்பிய ராணுவத்துக்காகவும், ராணுவ வீரர்களுக்காகவும் இன்றும் என்னால் முடிந்த பணிகளை, சேவைகளை செய்து வருகிறேன்.
அதனால் தான் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான நல அமைப்பைத் தொடங்கினேன். இந்த அமைப்பை விரிவுபடுத்தப்பட வேண்டிய நேரம் வரும். தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் 50 குழந்தைகளுக்கு நான் தற்போது உதவி வருகிறேன். இதை 100 குழந்தைகளுக்காக உயர்த்த விரும்புகிறேன்" எனக் கூறும் கம்பீர் சமீபத்தில் டெல்லியில் பிச்சை எடுத்த ராணுவ வீரருக்கு உதவியது அனைவரும் அறிந்ததே.....