காஷ்மீரில் பாக்.தீவிரவாதிகள் வெறித்தனம்: சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் தகர்ப்பு - 30-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!
ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகன அணிவகுப்பு மீது குண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் பாகிஸ்தான் தீவிரவாதிகள். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான சோகம் நடந்துள்ளது.
விடுமுறை முடிந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் சேருவதற்காக 2500 சி ஆர்பிஎப் படை வீரர்கள் 78 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். ஜம்மு - ஸ்ரீநகர், நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா என்ற இடத்தில் வாகனங்கள் சென்ற போது எதிரே அதிவேகமாக வந்த மர்ம வாகனம் ஒன்று வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது மோதியது. அப்போது பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டு வீரர்களின் வாகனங்கள் சின்னாபின்னமானது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஐத் தாண்டியது.
இந்த மோசமான தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சமீப காலத்தில் இந்திய பாதுகாப்பு படை மீது நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதல் இதுவாகும். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.