ஜெட் வேகத்தில் நடந்த அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை!

அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. சென்னையில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றது.

கூட்டணிக்கு அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது...மிரட்டுகிறது ... ரகசியபேரம் பேசுகிறது ... என்றெல்லாம் சர்ச்சைகள் சுழன்றடிக்க அதற்கெல்லாம் இரு கட்சிகளும் முற்றுப்புள்ளி வைத்து விட்டன. நேற்று ஒரே நாள் இரவில் ஜெட் வேகத்தில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது.

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நேற்றிரவு 10 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் பிடித்து சென்னை வந்தார். நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டிற்கு சென்றார். அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோரும், பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரும் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு தாண்டியும் நீடித்த பேச்சு 1மணிக்கு மேல் முடிவடைந்தது. உடனே அதிகாலையலேயே பியூஸ் கோயல் டெல்லிக்கும் பறந்து விட்டார்.

நள்ளிரவில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாளில் கூட்டணி, தொகுதி உடன்பாடு அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

More News >>