தனித்துப் போட்டிதான் ஜெயலலிதாவின் கொள்கை - மீண்டும் போர்க்கொடி தூக்கும் தம்பித்துரை!
அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதிஅதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான் என்று தம்பித்துரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் தம்பித்துரை. இதனால் கட்சிக்குள்ளேயே அவரை ஓரம் கட்டி வருகின்றனர். அதிமுகவில் மூத்த தலைவரான தம்பித்துரைக்கு மக்களவைத் தேர்தல் தொடர்பான குழுக்களிலும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அவருடைய கரூர் தொகுதிக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியை விருப்ப மனு செய்ய வைத்து தம்பித்து ரையை கடுப்பேற்றியுள்ளனர்.
மேலும் நேற்றிரவு அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு உடனடி ரியாக்ஷனாக தமது எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளார் தம்பித்துரை.
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை,ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான். ஆனாலும் கூட்டணிப் பேச்சு நடத்துகிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழுவிலும் நான் இடம் பெறவில்லை என போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
கரூர் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி விருப்பமனு செய்தது குறித்து பதிலளித்த தம்பித்துரை, அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிட விரும்பலாம். நானும் மனு செய்துள்ளேன். எனக்கு கிடைக்குமா? என்பது கூடத் தெரியாது. யாரை நிறுத்தினாலும் வெற்றிக்கு பாடுபடுவேன் என ஆதங்கமாகவே தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பாக தம்பித்துரை வெளியிட்ட கருத்துக்களால் அதிமுகவில் மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார். தம்பித்துரை கருத்து மதிக்கப்படுமா?அல்லது கட்சிக்குள் ஓரம் கட்டப்படுவாரா? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.