தேர்தல் களத்துக்கு வருவாரா தா.பா? கலங்கும் கம்யூனிஸ்ட்டுகள்!
மக்களவைத் தேர்தலுக்கு தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் தா.பாண்டியனின் மேடைப் பேச்சுக்கு தனி வரவேற்பு உண்டு.
அதிலும் ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுக ஆதரவு பாசத்தை அவர் எப்போதும் கைவிட்டதில்லை. கருணாநிதிக்கு எதிரான மேடை என்றால், தா.பாவைப் போல வரிந்து கட்டிக் கொண்டு பேசுவதற்கு வேறு ஒருவரும் கிடையாது.
அதை தன்னுடைய கூட்டணிக்கு வலிமையான ஆயுதமாகப் பார்த்தார் ஜெயலலிதா. 1991 எம்பி தேர்தலில் வடசென்னை தொகுதியில் வெற்றி பெறக் காரணமாக இருந்தவர் என்பதால், ஜெயலலிதா மீது தா.பாவும் தனிப்பாசம் வைத்திருந்தார்.
இந்தமுறை திமுக அணியில் சிபிஐ கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. மோடிக்கு எதிரான பிரசார ஆயுதமாக தா.பா இருப்பார் என அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. ' ஆனால் இந்தமுறை தேர்தல் பிரசாரத்தில் தா.பா ஈடுபடுவது கடினம். வாரம்தோறும் டயாலிஸிஸ் செய்ய வேண்டிய சூழலில் அவர் உடல்நிலை உள்ளது.
உடல் சோர்வு ஏற்படுவதால் மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமே அவர் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படலாம். இதனால் கம்யூனிஸ்ட்டுகளும் மனவேதனையில் உள்ளனர்' என்கின்றனர் சிபிஐ கட்சியினர்.
எழில் பிரதீபன்