காஷ்மீர் பயங்கரம் : தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் - பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

காஷ்மீர் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ள பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று கடுமையாக கூறியுள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த 40 வருடங்களில் நடத்தப்பட்ட மிகப் பெரிய இத்தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் டெல்லியில் அவசரமாக கூடி விவாதித்தது.

இக் கூட்டத்தில், தொடர்ந்து தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தும் பாகிஸ்தானை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் 1996-ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, பாகிஸ்தானை இந்தியாவின் நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கிக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

காஷ்மீர் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More News >>