சின்னத்தம்பி யானை ஊசிக்கு மயங்கினான் - பத்திரமாக முகாமுக்கு பயணம்!

நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின் சின்னத்தம்பி யானை மயக்க ஊசி பிடிக்கப்பட்டான். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு பத்திரமாக முகாமுக்கு பயணமாகிறான்.

கடந்த ஒருமாத காலமாக கோவை, திருப்பூர் மாவட்ட கிராமங்களில் சாதுவாக வலம் வந்த சின்னத்தம்பி யானை கதாநாயகனாகவே மாறிவிட்டான். வனத்துறையினர் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றப் போகிறார்கள் என்ற தகவலால் வன ஆர்வலர்கள் பிரச்னையை கோர்ட்டுக்கும் கொண்டு சென்றனர்.

பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின் சின்னத்தம்பி யானையை துன்புறுத்தல், பத்திரமாகப் பிடித்து முகாமுக்கு அனுப்ப வேண்டும். யானையை காட்டுக்குள் விடுவதா?கும்கியாக மாற்றுவதா? என்ற இறுதித் தீர்ப்பு வரை பத்திரமாக முகாமில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து உடுமலை அடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்புத் தோட்டம், வாழைத்தோப்புகளில் முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை நேற்று மாலை முதல் வனத்துறையினரும், மருத்துவர்களும் கண்காணித்து வந்தனர்.

இன்று காலை சின்னத்தம்பிக்கு 4 முறை மயக்க மருந்து செலுத்திய பின் மயங்கினான். இதன் பின் 2 கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு வரளியாறு முகாமுக்கு சின்னத்தம்பி பத்திரமாக பயணமானான். வனத்துறையினர் சின்னத்தம்பி வேட்டையைக் காண சுற்றுப்புற பொது மக்கள் திருவிழா போல் திரண்டு சின்னத்தம்பிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதனிடையே சின்னத்தம்பி யானையால் சேதமான விவசாயப் பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

More News >>