`இனி போர்க்களத்தில் பேசுங்கள் - புல்வாமா தாக்குதலுக்கு கெளதம் கம்பீர் கண்டனம்!

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில், தமிழக வீரர்கள் இருவர் உட்பட மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொடூரத் தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற ஒற்றை நபரே செய்துள்ளார்.

தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரும் தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ``தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுடனும், தீவிரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர் களத்தில் மட்டுமே இருக்க வேண்டும். பொறுத்தது போதும்" என்றுக் கூறியுள்ளார்.

இதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், ``நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வீர மரணம் அடைந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். இவர்களைப் போல் மேலும் பல பிரபலங்களும் தாக்குதலை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

More News >>