பிரதமர் மோடி துவக்கி வைத்த இந்தியாவின் அதிவேக ரயில் - முதல் நாளிலேயே நடுவழியில் ரிப்பேர்!

இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையுடன் பிரதமர் மோடியால் டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்ட 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நாள் ஓட்டத்திலேயே ரிப்பேராகி நடுவழியில் நின்றது.

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் நாட்டின் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்றிரவு டெல்லியில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில் வாரணாசி சென்று விட்டு இன்று காலை மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட்டது.

உ.பி.மாநிலம் தண்ட்லா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்த போது ரயில் சக்கரங்கள் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. மாடு ஒன்றின் மீது மோதியதால் சக்கரங்கள் சேதமானதாகக் கூறப்பட்டு, சரி செய்த பின் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டது.

அடுத்த 2 மணி நேரத்தில் ஹாத்ராஸ் என்ற இடமருகே ரயில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு நின்று விட்டது. அந்தக் கோளாறும் ஒரு வழியாக சரிசெய்யப்பட்டு 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு டெல்லி சென்று கொண்டிருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சோதனை ஓட்டமாகத்தான் ரயில் இயக்கப்பட்டதாகவும், நாளை முதல் பயணிகள் போக்குவரத்துக்காக இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More News >>