தமிழகக் கூட்டணிகள் எப்படிப்பட்டவை? கடுகடுத்த அமித் ஷா!!

பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்குத் தேவையான வைட்டமின்களை ஏற்பாடு செய்துவிட்டார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேமுதிகவுக்கு 4 சீட்டுகளோடு தொகுதி செலவுகளையும் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டனர்.

இதே வாக்குறுதியை பாமகவுக்கும் கொடுத்துள்ளனர். அதேபோல், பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான செலவுகளைப் பற்றியும் 'மணி' அமைச்சர்கள் டெல்லி தலைவர்களுக்கு உறுதி கொடுத்துள்ளனர்.

அதைக் கேட்ட மத்திய அமைச்சர் ஒருவர், கூட்டணி உறுதியாகிவிட்டது என்ற அறிவிப்பு வெளியானால் போதும். எங்களுக்குத் தேவையான தொகுதிகளை மறுப்பு சொல்லும் நிலை ஏற்படக் கூடாது.

தொகுதி செலவுகளைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். தொகுதிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டாராம்.

நேற்று நடந்த சந்திப்பு விவரங்களை அமித் ஷா கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர் அதிமுக தரப்பு பற்றி எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சொல்லப் போனால், நாம் நிற்கப் போகும் தொகுதிகளில் கூடுதல் அக்கறை எடுங்கள். நம்முடைய வெற்றிதான் முக்கியம் என கடுகடுப்போடு கூறிவிட்டாராம்.

இந்தப் பதிலை முரளிதர் ராவ் எதிர்பார்க்கவில்லையாம். இதைப் பற்றிப் பேசும் டெல்லிவாலாக்கள், ' ஒவ்வொரு கட்சிகளைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கிறார் அமித் ஷா. தேர்தலுக்கு முன் ஒரு நிலைப்பாடும் தேர்தலுக்குப் பிறகு மற்றொரு நிலைப்பாடும் எடுப்பதில் தமிழக தலைவர்கள் வல்லவர்கள் என நினைக்கிறார்.

மற்றவர்களை வெற்றி பெற வைப்பதற்காக உழைத்தாலும் அதனால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதால்தான் இப்படியொரு வார்த்தையைக் கூறினார் அமித் ஷா ஜி' என்கிறார்கள் சிரிப்புடன்.

-எழில் பிரதீபன்

 

More News >>