சிக்கல் ராமதாஸிடம் தான் இருக்கிறது! கடுப்பான பியூஷ் கோயல்!!
அதிமுக, பாஜக கூட்டணி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. கடந்த காலங்களில் ஜெயலலிதா ஒதுக்கிய அதே தொகுதிகளோடு கூடுதல் இடங்களைக் கேட்டு பாஜக மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இதனை தமிழிசை தரப்பினர் மறுக்கின்றனர். இதைப் பற்றிப் பேசும் தமிழிசை ஆதரவாளர்கள், எங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பத்து நாட்களுக்கு முன்பே உறுதி செய்துவிட்டோம். கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கோடு இருக்கிறோம்.
இதுதவிர தென்சென்னை உட்பட நாங்கள் வெற்றி பெறப்போகும் தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் கொடுத்துவிட்டோம். அதில் சில மாறுதல்களோடு அவர்களும் இசைவு தெரிவித்துவிட்டார்கள். இப்போது சிக்கல் வருவதற்குக் காரணம், பாமகதான்.
அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டுகிறது. அதிமுக செல்வாக்கோடு இருக்கும் தொகுதிகளையும் ராமதாஸ் குறிவைக்கிறார். தருமபுரியை உங்களுக்குக் கொடுத்தால் கிருஷ்ணகிரியை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என அதிமுக தலைமை சொல்கிறது.
இதற்கு ராமதாஸ் உடன்பட மறுக்கிறார். இதனை பியூஷ் கோயலின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். பாமக ஒத்துவந்துவிட்டால், ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.