ஸ்டெர்லைட் மேல் முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் இறுதித் தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு மே மாதம் நடந்த பெரும் போராட்டத்திற்குப் பின் ஆலையை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டு சீல் வைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களை நடத்தி ஆலையைத் திறக்க அனுமதி பெற்று விட்டது.
ஆனால் தமிழக அரசு ஆலையைத் திறக்க உரிய அனுமதி வழங்காததுடன், மின் இணைப்பு வழங்கவும் மறுத்து, தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவையும் தாக்கல் செய்தது.
மறுசீராய்வு மனு மீதான விசாரணை கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது உச்ச நீதிமன்றம் . இந்நிலையில் உச்ச மன்றத் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.