`சக மாணவிக்கு தாலிகட்டிய மாணவன் அறுத்து எறிந்த பெற்றோர் - விழுப்புரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
விழுப்புரம் அருகே ஒருதலை காதல் காரணமாக மாணவிக்கு பள்ளியில் வைத்து மாணவன் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ளது மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே அந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே வகுப்பில் தன்னுடன் படிக்கும் வினோதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. பல முறை தனது காதலை மாணவி வினோதாவிடம் சொல்லியுள்ளார் ராமன். ஆனால் அவரை ஏற்க மறுத்து அவரை கண்டுகொள்ளாமல் வந்துள்ளார் வினோதா. இருப்பினும் விடாமுயற்சியாக அவருக்கு காதல் தூது விட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் தன் காதலை ஏற்றுக்கொண்டால் உடனே திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறி டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துள்ளான் மாணவன் ராமன். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் உணவு இடைவேளையின்போது மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் படி மாணவி வினோதாவை வற்புறுத்தியிருக்கான். ஆனால் அவர் செவிமடுக்கவே, உடனடியாக வெளியில் சென்று தாலி கயிற்றை வாங்கி வந்து பள்ளி அறையிலேயே வைத்து மாணவி கழுத்தில் கட்டியுள்ளான் ராமன். அவனின் செய்கையால் அதிர்ச்சியடைந்த மாணவி வினோதா அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை எடுத்துக்கூறியுள்ளார். தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் உடனே மாணவியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்ததுடன் பள்ளிக்கு வந்து நடந்த சம்பவத்தை ஆசிரியர்களை கண்டித்தும், மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் முற்றுகையிட்டனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பள்ளியில் தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி அடுத்த மாதம் தேர்வு நெருங்குவதால் மாணவி மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தாலிகட்டிய மாணவன் பள்ளிக்கு வரக்கூடாது, நேரடியாக தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
`காதல் அழியாது எனக் கடிதம்; உறவினரின் தாக்குதல்' - திருவண்ணாமலை மாணவன் கொலையா? தற்கொலையா?