`அப்பா அவ்வளவு கோபப்பட்டிருக்க கூடாது - செல்ஃபி விஷயத்தால் கார்த்தி வருத்தம்!
நடிகர் சிவக்குமார், சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். அப்போது ஒரு இளைஞர் சிவக்குமாரை நேரில் பார்த்ததும் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். தன்னையும் சேர்த்து செல்ஃபி எடுத்த அந்த இளைஞரின் போனை தட்டிவிட்டார் சிவக்குமார்.
இது பெரிய விவாதப் பொருளானதுடன், இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியதுடன், சிவக்குமார் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட சிவக்குமார், நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டதுடன் அந்த இளைஞருக்கு புதுசெல்போன் ஒன்றினையும் வாங்கி தந்தார்.
பின்னர் இந்தப் பிரச்னை சற்று ஓய்ந்த நிலையில் சென்னையில் நடந்த இயக்குநரின் குடும்ப திருமண விழாவில் கலந்துகொண்டார் சிவக்குமார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் சிவக்குமார் உடன் செல்ஃபி எடுக்க முயல உடனடியாக அவரது போனை மீண்டும் தட்டிவிட்டார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவக்குமார் செல்ஃபியை நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இன்று அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிவக்குமார் செயல் குறித்து அவரது மகன் கார்த்தி பேசியுள்ளார்.
அதில், ``ஒருவரது அனுமதி இல்லாமல் அவரை செல்ஃபி எடுப்பது அநாகரீகமான செயல். செல்ஃபியோ, போட்டோவோ எதுவாக இருந்தாலும் அவரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நாகரீகத்தை இங்கே யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது ஒரு சோகமான விஷயம். ஆனால் என் தந்தை செய்தது ஒரு சிறிய விஷயம். இதனை மீடூ விவகாரம் போன்று பெரிய சர்ச்சையாக்குவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், இந்த விஷயத்தில் அப்பா அவ்வளவு கோபப்பட்டிருக்க கூடாது" எனக் கூறியுள்ளார்.