`கணவர் ஓவர் டார்ச்சர் தீர்த்துக்கட்ட வேண்டும் - கள்ளக்காதலியால் சிக்கிக்கொண்ட பானிபூரி கடைக்காரர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர் யார் என்ற விவரம் தெரியாத வண்ணம் உடல் முழுவதும் தீயில் கருகி இருந்தது. பின்னர் பிரேதே பரிசோதனை அறிக்கை மூலம் போலீஸார் நடத்திய விசாரணையில் சடலமாக இருந்தது கிருஷ்ணகிரி அருகே நாரலபள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இவர் பெங்களூர் அருகே பெல்லந்தூரில் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும், இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளதும் தெரியவந்தது.
இருப்பினும் எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீட்டித்து வந்தது. சுப்பிரமணி ஏதும் முன்விரோதம் இருந்ததா, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களா என்று அவரின் மனைவி பாக்கியலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தர போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இதன்பின் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை வெளிவந்ததது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது, ``வேலை நிமித்தமாக சுப்பிரமணி பெல்லந்தூரில் தங்க வேண்டி இருந்தால் தன்னுடன் தன் மனையையும் அழைத்துச் சென்று தனி குடித்தனம் இருந்துள்ளார்.
சுப்பிரமணி வேலை பார்த்து வந்த இதே பகுதியில் பானிப்பூரி கடை நடத்தி வருபவர் சரத்குமார். இவரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் தான். இவருக்கும் சுப்பிரமணி மனைவி பாக்கியலட்சுமிக்கும் சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாற சரத்குமார் அடிக்கடி சுப்பிரமணி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனை அறிந்த சுப்பிரமணி மனைவியை சத்தம்போட்டு 3 மாதத்திற்கு முன்பு அவரது சொந்த ஊரான நாரலபள்ளிக்கு அழைத்துச்சென்று வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு திரும்பியுள்ளார். ஆனாலும் பாக்கியலட்சுமி தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் போனில் பேசி வந்துள்ளார். தொடர்ந்து 10ம் தேதி பாக்கியலட்சுமியை பார்ப்பதற்காக சரத்குமார் நாரலப்பள்ளி வந்துள்ளார். அப்போது அவரிடம், தன் கணவன் டார்ச்சர் செய்வதாக கூறிய பாக்கியலட்சுமி அவரை தீர்த்துக்கட்டினால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்டுக்கொண்ட சரத்குமார் பெல்லந்தூர் திரும்பியபிறகு சுப்பிரமணிக்கு போன் செய்துள்ளார். அவரிடம் ``நாம் இருவரும் புதிய தொழில் தொடங்குவோம். வா அதை பற்றி பேசலாம்" எனக் கூறி அவரை வரவழைத்துள்ளார். அப்போது தனது பைக்கில் அவரை கூப்பிட்டுகொண்டு மதுக்கடையில் சென்று மது வாங்கிக்கொண்டு தனியார் தோப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சுப்பிரமணிக்கு மதுவை ஊத்திக்கொடுத்து போதை ஆக்கியுள்ளார். அவர் போதை ஆனதும் அவர் மீது கல்லை போட்டு கொன்றுள்ளார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சுப்பிரமணி. பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி அவரை எரித்ததுடன் கொலை செய்ய பயன்படுத்திய கல்லை அருகில் உள்ள ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்" என்றனர். இதற்கிடையே, சர்ஜாபுரம் பகுதியில் பதுங்கி இருந்த சரத்குமாரை பாகலூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கள்ளகாதலுக்காக நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.