ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு!
ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை எதிர்த்து தமிழக அரசின் மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதனால் தூத்துக்குடியில் பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பெரும் போராட்டம் காரணமாக ஆலைக்கு சீல் வைத்தது தமிழக அரசு .ஆனாலும் விடாப்பிடியாக சட்டப் போராட்டம் நடத்திய ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் வரை சென்று ஆலையைத் திறக்க அனுமதி பெற்றது.
ஆனால் ஆலையைத் திறக்க ஒத்துழைப்பு வழங்க மறுத்த தமிழக அரசு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை முடித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல் நிலவுவதால் தூத்துக்குடியில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.