ஸ்டெர்லைட்டுக்கு தடை தீர்ப்பு நாள் வாழ்க்கையிலே மகிழ்ச்சியான தினம் - இனிப்பு வழங்கி கொண்டாடிய வைகோ!
ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை வழங்கிய இன்றைய தினம் தான் தமது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் என்று குதூகலத்தில் திளைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை எடுத்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி விடாது போராடியவர் வைகோ. இன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தீர்ப்பு வெளிவரக் காரணமும் வைகோவின் வாதங்கள் தான் முக்கியக் காரணம். வழக்கு விசாரணையின் போது ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகப் போகும் சூழல் உருவான போது உச்ச நீதிமன்றத்தில் வைகோ தமது வாதத்தால் கர்ஜித்து தீர்ப்பையே ஒத்தி வைக்கச் செய்தார்.
இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் குதூகலத்தின் உச்சிக்கே சென்று விட்டார் வைகோ .உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நேரத்தில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த வைகோ, இந்த நாள் என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் என்று கூறி இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினார்.