ரஜினி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏன்? பின்னணியில் நடந்த பேரம்!
நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த கட்சிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணியில் சில பேரங்களும் இருக்கின்றன என்கிறார்கள் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள். மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இதைப் பற்றிப் பேசும் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள், ' அதிமுகவிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் வரையில் மோடியும் அமித் ஷாவும் ரஜினி வருகையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஸ்டாலினைப் போல சாதி, மதமற்ற தலைவராக ரஜினியைப் பார்ப்பார்கள் என்பது அவர்களுடைய எண்ணம். இதற்காகத்தான் தனிக்கட்சி தொடங்குமாறு அவரை வற்புறுத்தினர். எப்படியாவது ரஜினியுடன் கூட்டணி வைத்துவிடலாம் என மோடி மட்டுமல்ல, தமிழக பாஜக தலைவர்களும் நம்பிக்கையோடு இருந்தனர்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகள் வரையில் போட்டியிடலாம் என்ற முடிவிலும் ரஜினி தரப்பினர் இருந்தனர். இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அதற்குள் இத்தனை இடங்களில் போட்டியா என பாஜக வட்டாரத்தில் கேட்டனர். எதையாவது சொல்லி, தேர்தலில் இருந்து விலகிவிட வேண்டும் என நினைத்தார் ரஜினி.
அதனால்தான் பல டிமாண்டுகளை வைத்தார். மக்களவைத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்திருந்தால், ரஜினி நிலைப்பாட்டில் மாற்றம் வந்திருக்கும். அதனை செய்து தருவதற்கு டெல்லி மறுத்துவிட்டது என்கிறார்கள்.
-எழில் பிரதீபன்