மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு! இறந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தை நெகிழவைத்த ஐஏஎஸ் அதிகாரி!
வரலாற்றில் மறக்கமுடியாத ரணமாக மாறியுள்ள புல்வாமா தாக்குதல் குறித்து நாடே பேசி வருகிறது. 40 வீரர்களின் உயிரிழந்த சோக வடு மாறுவதற்கும் இன்றும் அதே புல்வாமா மாவட்டத்தில் நான்கு ராணுவ வீரர்கள்சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைகொள்ள செய்துள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு உரிய விலையை தீவிரவாதிகள் அனுபவிப்பார்கள் என ஒற்றை குரலாக இந்தியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசாங்கள் நிதி உள்ளிட்ட உதவிகளை அறிவித்து வருகின்றன. இதேபோல் மற்றவர்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இவர்கள் எல்லோரும் நிதியுதவி, கல்வி உதவிகள் மட்டும் வழங்க இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலாக உதவி செய்து மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளார் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்ட கலெக்டராக இருப்பவர் இனயாத் கான். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தன் குமார் மற்றும் சஞ்சய் குமாரும் அடக்கம். இவர்களின் உயிரிழப்பால் குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அந்தக் குடும்பங்களுக்கு உதவ கலெக்டர் இனயாத் கான் இரு வீரர்களின் குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளார்.
இனி அந்தக் குழந்தைகளுக்கு படிப்பு செலவு, உணவு செலவு என வாழ்நாள் முழுவதும் ஆகும் செலவை அவர் ஏற்றுள்ளார். ஏற்கனவே இனயாத் கான் இருந்த இரு வீரர்களின் குடும்பங்களுக்கும் தனது சம்பளத்தை கொடுப்பதாக அறிவித்ததுடன் மாவட்டத்தில் உள்ள மற்ற அதிகாரிகளிடம் இருந்தும் இரண்டு நாள் சம்பளங்களை வாங்கி கொடுக்க செய்துள்ளார். எல்லோரும் நிதியுதவியோடு நின்று விட அதற்கு ஒருபடி மேல் சென்று குழந்தைகளை தத்தெடுத்து எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் மாறியுள்ள இனயாத் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.