நீண்ட இழுபறிக்குப் பின் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிப் பேச்சு முடிவானது!
முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது.
கடந்த 2014 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 42-ல் வெற்றி பெற்றன. ஆனால் அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளிடையே தொகுதி உடன்பாட்டில் சிக்கல் எழ தனித்தனியே போட்டியிட்டு தேர்தலுக்குப் பின் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் மீண்டும் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகின்றன.
மத்திய அமைச்சரவையிலும் சிவசேனா இடம் பெற்றிருந்தாலும் ராமர் கோயில், மகாராஷ்டிர விவசாயிகள் பட்டினிச் சாவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பாஜகவுடன் மோதல் போக்கை சிவசேனா கையாண்டது. ரபேல் விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து குடைச்சல் கொடுத்தது.
இதனால் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமையுமா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவை ஒரு வழியாக சமாதானம் செய்துவிட்டார்.
இன்று மும்பையில் அமித் ஷா முன்னிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெடுத் தானது. மக்களவைத் தேர்தலில்,25 தொகுதிகளில் பாஜகவும், 23-ல் சிவசேனாவும் போட்டி எனவும், சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளை சரி சமமாக பங்கிட்டுக் கொள்வது என்றும் உடன்பாடு கையெழுத்தானது.