2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது..? சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான மருத்துவ பொது நழைவுத் தேர்வான நீட், வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு என தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் பெறுவதை தடுக்கவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் நீட் தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

தேசிய அளவில் ஒரே மாதிரியான கேள்வித்தாள், அதாவது சிபிஎஸ்இ தரத்தில் கேள்வித்தாள் இடம் பெற்றிருப்பதால் மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் சிபிஎஸ்இ தர கேள்வித் தாள்களுக்கு விடையளிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால், இந்த மாணவர்கள் நீட் தேர்வை சந்திப்பதற்கு பெரும் பாடுபடுகின்றனர்.

இதனால், தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நீட் தேர்வு அறிவித்த முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டில் நீட் தேர்வில் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

More News >>