`இன்று மகாராஷ்டிரா நாளை தமிழகம் - கூட்டணி இறுதிவடிவத்தில் தீவிரம் காட்டும் அமித் ஷா!
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 14ம் தேதி வரைப் பாஜக , அதிமுக கூட்டணி என்பது அதிகாரபூர்வமற்றதாகவே இருந்தது. ஆனால் 14-ம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டணி பேச்சை அதிகாரபூர்வமாக்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் நடந்த சந்திப்பின்போது இரு கட்சியிலும் உள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய பியூஷ் கோயல், ``கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே இங்கு வந்திருக்கிறேன். தமிழக கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்" என்று கூறினார். தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவை எப்போது இறுதிவடிவம் பெறும், எப்போது தொகுதிகள் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலே இருந்தது.
இந்தநிலையில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக வட்டாரங்கள் குஷியில் உள்ளன. அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. நாளை சென்னை வரும் அமித் ஷா அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இன்று மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிப் பேச்சு முடிவான நிலையில் நாளை தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இறுதி ஆகும் எனத் தெரிகிறது.