ஆளுநர் கிரண்பேடியுடன் 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா வாபஸ்!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆளுநர் கிரண்பேடியுடன் 4 மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தைக்குப் பின் நாராயணசாமி போராட்டத்தைக் கைவிட்டார்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி,மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார், தன்னிச்சையாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே 6 நாட்களாக தமது அமைச்சரவைச் சகாக்களுடன் தர்ணா நடத்தி வந்தார். நேற்று ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முதல்வர் நாராயணசாமி நிபந்தனை விதிக்க இழுபறியானது.
ஒரு வழியாக இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மற்றும் முதல்வர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை செயலர்களும் பங்கேற்றனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடைபெற்று ஒரு வழியாக சமரசம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாள் தர்ணா போராட்டத்தை முதல்வர் நாராயணசாமி கைவிடுவதாக அறிவித்தார்.