அதிமுக கூட்டணியில் யார் ? யார்?- இன்று வெளியாகிறது அறிவிப்பு!
பாஜக தலைவர் அமித் ஷாவின் இன்றைய தமிழக வருகையால், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதிமுக அணியில் பாஜகவும், திமுக அணியில் காங்கிரசும் இணைவது முடிவாகிவிட்ட நிலையில் இதரக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பது தான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் காரணம் ஓரளவுக்கு ஓட்டு வங்கி வைத்துள்ள பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அதிமுக, திமுக என இரு தரப்பிலும் கூட்டணி பேரம் நடத்தியது தான்.இந்நிலையில் நேற்று பாமக தரப்புடன் அதிமுக தலைமை நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று பலகட்ட பேச்சு நடத்தி 6 சீட்டுகளுக்கு பாமக ஒத்துக் கொண்டதாக தகவல் .
தேமுதிகவை சரிக்கட்டும் பணியை பாஜக தரப்பு கையில் எடுத்து கிட்டத்தட்ட கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டது எனக் கூறப்படும் நிலையில் தான் பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோரின் இன்றைய திடீர் தமிழக வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அமித் ஷா, அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய பின் முதற்கட்டமாக கூட்டணி முடிவு, கூட்டணியில் யார் ? யார்? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட் டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி என உதிரிக் கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.