இந்தியா போர் தொடுத்தால் யோசிக்காமல் தக்க பதிலடி கொடுப்போம் - பாக்.பிரதமர் இம்ரான் கான் கொக்கரிப்பு!
பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொக்கரித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை குற்றம் சாட்டி வருகிறது இந்தியா.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்து 5 நாட்களுக்குப் பின் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த ஆதாரமும் இன்றி தொடர்ந்து பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தான் தொடர்பான ஆதாரங்களைக் கொடுத்தால் நடவடிக்கைக்குத் தயார்.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதம் பரவுவதை ஒரு போதும் அனுமதித்ததில்லை என்று கூறியுள்ள இம்ரான், பாகிஸ்தான் மீது வீண்பழி சுமத்தி போர் தொடுக்க இந்தியா நினைத்தால் எந்த தயக்கமுமின்றி பதிலடி கொடுக்க தயார் என்றும் இம்ரான் கான் கொக்கரித்துள்ளார்.