பாகிஸ்தான் கொடி பற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
'கழிப்பறை காகிதம்' என்ற ஆங்கில பதத்திற்கான (toilet paper) தேடலுக்கு கூகுள் தேடுபொறி, பாகிஸ்தான் கொடியை காட்டுவதாக செய்திகள் பரவின. 'சீனாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த கழிப்பறை காகிதம்' (the "best China-made toilet paper) மற்றும் 'உலகின் சிறந்த கழிப்பறை காகிதம்' (best toilet paper in the world) போன்ற தேடல்களுக்கு விடையாக பாகிஸ்தான் கொடியே கூகுளால் காட்டப்படுகிறது என்ற தகவல் முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பரபரப்பாக பரவி வந்தது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மத்திய ஆயுதப்படை பிரிவினர் 49 பேர் பலியாகினர். அந்தக் கொடூர நிகழ்வுக்குப் பிறகு கூகுள் தேடலில் இக்குறைபாடு காணப்படுவதாக செய்திகள் பரவின. அதை கூகுள் நிறுவனம் தற்போது மறுத்துள்ளது.
"மீம் இணையதளம் ஒன்றின் பழைய திரைப்பதிவு (ஸ்கிரீன் ஷாட்) ஒன்றினை மேற்கோள் காட்டி பல செய்திகள் பரவி வருகின்றன. இந்த விஷயத்தை ஆய்வு செய்து வருகிறோம். 2017ம் ஆண்டு தேதியிட்ட அப்பதிவுக்கும் கூகுளின் பயனர் இடைமுகத்திற்கும் (User Interface) எந்தத் தொடர்புமில்லை. கூகுள் தேடுபொறியின் எந்தப் படிமுறையும் (algorithms) இதுபோன்ற சொற்களோடு இணைக்கப்படவில்லை. கழிப்பறை காகிதம் என்ற தேடலுக்கு கூகுள் தேடுபொறி பாகிஸ்தான் கொடியை காட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இச்செய்தி பரவி, அதையே பலர் தேடி வருவதால், தேடுபவர்களுக்குத் தவறான அந்தப்படம் காட்சியளிக்கிறது" என்று கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.