மாசு துகள்களை வடிகட்டும் ஜன்னல் வலை: சீனா கண்டுபிடித்துள்ளது
காற்றிலுள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் மாசு துகள்களை தடுக்கும் பிரத்தியேக ஜன்னல் வலைகளை சீன விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஒளி ஊடுருவக்கூடிய மற்றும் வளையும்தன்மை கொண்ட இந்த ஜன்னல் வலை, வெள்ளி நைலான் மின்வாய்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இவை வணிக கட்டடங்களுள் நுழையும் ஒளியின் அளவினை சீரமைப்பதோடு, காற்று மாசானது கட்டடத்துக்குள் நுழையாமல் தடுக்கும் பணியையும் செய்யும் என்று கூறப்படுகிறது.
சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த யூ சூஹாங் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இதை வடிவமைத்துள்ளனர். இந்த ஜன்னல் வலைகள் 2.5பிஎம் என்ற அளவிலான மாசு துகள்களையும் வடிகட்டும் திறன் கொண்டவை.
2.5 பிஎம் என்பது 2.5 மைக்ரோமீட்டர் சுற்றளவு கொண்ட மாசு துகளை குறிக்கும். 1 மைக்ரோமீட்டர் என்பது 1 மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். நமது தலைமுடி 7 பிஎம் அளவு கொண்டதாகும். 2.5 பிஎம் என்பது மிக நுண்ணிய துகள்களை குறிக்கும்.
7.5 சதுர மீட்டர் அளவு கொண்ட வெள்ளி நைலான் வலையை 20 நிமிடத்தில் உருவாக்கியுள்ளதாகவும் இதற்கு 15.03 டாலர்கள் செலவானதாகவும் விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.
எதிர்காலத்தில் காற்றிலுள்ள மாசினை வடிகட்ட இதைக் காட்டிலும் சிறந்த ஏற்பாடுகளை செய்வதற்கு இந்த ஜன்னல் வலை காரணமாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.