`பாகிஸ்தானுக்கு நாங்க சளைச்சவங்க இல்ல - இம்ரான் கானை போல் சவுதி இளவரசரை வரவேற்ற மோடி!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லி வந்துள்ளார். அவருக்கு மத்திய அரசு உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒருவாரகால அரசுமுறைப் பயணமாக ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி முதலில் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார். பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடாக சவுதி விளங்கி வருகிறது. இதனால் அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் வரும்போதே அவர் விமானத்துக்கு பின்புறமாக ராணுவ விமானங்கள் பறக்கவைக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வானிலே இந்தப் பாதுகாப்பு என்றால் தரையில் சொல்லவே தேவையில்லை. சல்மான் பாகிஸ்தானில் இறங்கியதும் வழக்கமான அரசின் புரோட்டாகால் நடைமுறைகளுக்கு மாறாக வரவேற்பு நிகழ்வுக்காக பிரதமர் இம்ரான் கானே விமான நிலையம் சென்றார்.

அங்கு சல்மானுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார். பின்னர் சல்மானை அரசு மாளிகைக்கு கூப்பிட்டு வரும்போது தன்னுடைய காரிலேயே அவரை அழைத்து வந்ததுடன் தானே டிரைவராக இருந்து காரை ஒட்டி வந்தார் இம்ரான் கான். வழிநெடுகிலும் சல்மானை வரவேற்று மிகப்பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எல்லாம் ஒருபடி மேலாக பாகிஸ்தானின் மிக உயரிய சிவிலியன் விருதான `நிஷான்-இ-பாகிஸ்தான்’-ஐ சல்மானுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார் இம்ரான்.

இதற்கிடையே, பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது இந்தியா வந்துள்ளார் பின் சல்மான். தனி விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9 மணியளவில் டெல்லி வந்தார். பாகிஸ்தானுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல பிரதமர் மோடியும், டெல்லி விமான நிலையத்துக்கே சென்று சல்மானை வரவேற்றார். படை, பரிவாரங்களுடன் செல்வது போல் தனது அதிகாரி படைகளுடன், மேள தாளங்கள் முழங்க சல்மானை வரவேற்றார் மோடி. சல்மான் விமானத்தை விட்டு இறங்கியதும் அவரை கட்டித்தழுவி வரவேற்றார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவுதி இளவரசர் சல்மான் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, தீவிரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

More News >>