தேர்தலுக்கு தேர்தல் அந்தர் பல்டி... வரலாறு பேசும் பா.ம.க.வின் தடாலடி கூட்டணிகள்!
தமிழக அரசியல் களத்தில் வீரவசனம் பேசிவிட்டு, கடும் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு அடுத்த நாளே அதே கட்சியுடன் தயக்கமே இல்லாமல் கூட்டணி சேருவது என்பதில் பாமகதான் முன்னிலை வகிக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவையும் ஆட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது பாமக. இப்போது அதே அதிமுகவுடன் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை அமைத்திருக்கிறது பா.மக.
1989-ல் பாமக தொடங்கப்பட்டபோது லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாமக தனித்தே போட்டியிட்டது. 1991- சட்டசபை தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிட்டு 1 இடத்தில் வென்றது.
1996-ம் ஆண்டு முதல் கூட்டணி அரசியல் என்கிற பாதைக்குள் நுழைந்தது பாமக. மதிமுக, சிபிஎம், வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து 3-வது அணியை உருவாக்கியது பாமக.
இதனையடுத்து 1998 லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக அணியில் இடம்பிடித்தது பாமக. 1999 லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக.
2001-ல் அதிமுக அணி, 2004 லோக்சபா, 2006 சட்டசபை தேர்தல்களில் திமுக அணியில் பாமக இடம்பெற்றது. 2009 லோக்சபா தேர்தலில் அதிமுக, 2011 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றது. 2016 சட்டசபை தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்துப் போட்டியிட்டது.
பின்னர் திராவிட கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது; பாஜகவுடன் 200% கூட்டணியே இல்லை என சத்தியம் அடித்து பேசினார் பாமக் நிறுவனர் ராமதாஸ். இப்போது மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்திருக்கிறது பாமக