கடனைக் கட்டாவிட்டால் சிறைத் தண்டனை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஆர்.காம் எரிக்சன் நிறுவனத்துக்கு 453 கோடி பாக்கி வைத்திருந்தது. இதனை அனில் அம்பானி கட்டாததால் உச்ச நீதிமன்றம் சென்றது எரிக்சன். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கடனை செலுத்தவில்லை.
இதனால் எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி, அவருடைய நிறுவன அதிகாரிகள் 2 பேர், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரோரிங்டன் நாரிமன் அமர்வு முன் விசாரணைக்கு ஆஜராகினர். 2 நாட்கள் நடந்த விசாரனைக்குப் பின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அனில் அம்பானி மற்றும் 2 அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை 453 கோடி ரூபாயை 4 வாரத்திற்குள் செலுத்த வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் 3 பேருக்கும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக தலா ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டு அதனை ஒரு மாதத்திற்குள் கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.