மகாராஷ்டிராவில் யார் முதல்வர்...? கூட்டணி முடிவான இரண்டே நாளில் பாஜக -சிவசேனா மீண்டும் மோதல்!

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு முடிவடைந்த இரண்டே நாளில் இரு கட்சிகளிடையே மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது.

மகாராஷ்டிர அரசியலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி வைத்துக் கொண்டாலும் அடிக்கடி பகிரங்கமாகவே கருத்து மோதலில் ஈடுபடுவது சகஜமாகி விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் பங்கு வகித்து வரும் சிவசேனா, வரும் மக்களவைத் தேர்தலிலும், தொடர்ந்து 6 மாதத்தில் நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு எக்கச்சக்கமாக முரண்டு பிடித்தது.

சிவசேனாவை ஒரு வழியாக சமாளித்த கூட்டணிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக்கினார் பாஜக தலைவர் அமித்ஷா .இதன்படி மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு 25, சிவசேனாவுக்கு 23 தொகுதிகள் எனவும், சட்டப்பேரவைத் தேர்தலில் சம அளவு தொகுதிகள் என்று நேற்று முன்தினம் உடன்பாடு கையெழுத்தானது.

மேலும் மாநிலத்தில் முதல்வர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் இரு கட்சிகளும் சமமாக பிரித்துக் கொள்வது என்றும் அதன்படி முதல்வர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வது என்றும் முடிவானது.

ஆனால் மாநில பாஜக அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சி கூடுதல் இடங்களைப் பெறுகிறதோ அந்தக் கட்சிக்குத் தான் முதல்வர் பதவி என புது குண்டு போட்டுள்ளார். இதற்கு சிவசேனாவைச் சேர்ந்த மூத்த தலைவரும் அமைச்சருமான ராமதாஸ் கதம் கொதித்தெழுந்து, அதெல்லாம் முடியாது. பேசியபடி முதல்வர் பதவியில் பங்கு வேண்டும். முடியாது என்றால் இப்போதே கூட்டணியை முறித்து தனியாக தேர்தலை சர் திக்கக் தயார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு அமைச்சர்களின் சர்ச்சை பேச்சால் கூட்டணி உடன்பாடு செய்யப்பட்ட இரண்டே நாளில் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே மீண்டும் மோதல் வெடித்து பரபரப்பாகி உள்ளது.

More News >>