வசந்த காலம் யாருக்கு? உதிரும் இலைகளை டிவீட் செய்த கிரண்பேடி!

புதுச்சேரியில் வசந்த காலம் பிறக்கிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று கூறி உதிரும் இலைகளை பதிவிட்டு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

புதுச்சேரியில் என்ன போராட்டம் நடந்தால் எனக்கென்ன? என்பது போல் ஆளுநர் கிரண்பேடி தன் பாட்டுக்கு தினமும் ஏதேனும் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டு வருகிறார். முதல்வர் நாராயணசாமியின் தர்ணாவை கிண்டல் செய்து 'அண்டங்காக்கை', 'யோகா' எனக் கூறி 'காக்கை' படத்துடன் டிவீட் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

நேற்று ஒன்றுக்கு மூன்று காக்கைகளை பதிவிட்டு என்ன ஒரு அமைதியான 'இயற்கைச் சூழல், இதைல்லாம் தவிர்க்க முடியாதது' என்று புதிராக பதிவிட்டிருந்தார்.

இன்று காலையிலும் டிவிட்டரில் மேலும் ஒரு புதிர் போட்டுள்ளார். மரத்திலிருந்து காய்ந்த இலைகள் உதிர்வதை படம் பிடித்து 'புதுச்சேரியில் வசந்த காலம் பிறக்கிறது.பழசு,புதுசுக்கு வழி விடுகிறது. இது தான் இயற்கையின் நீதி. ராஜ் நிவாசிலும் வசந்த காலம் வரப் போகிறது' என்று உதிரும் இலைகளை படமாகவும், வீடியோவாகவும் டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

பழையன கழிதல், வசந்த காலம் என்பது புதுச்சேரிக்கா? ஆளுநர் மாளிகைக்கா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

 

More News >>