தினசரி பயனர்: 10 கோடியை கடந்த ட்ரூகாலர் செயலி!

மொபைல் போனில் அழைப்பவரை அடையாளம் காண உதவும் செயலியான ட்ரூகாலரை (truecaller) இந்தியாவில் தினமும் 10 கோடி பேர் உபயோகிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த ட்ரூகாலர் நிறுவனம், அழைப்பவரை அடையாளம் காணுதல், உடனடி செய்தி பரிமாற்றம், காணொளி அழைப்பு மற்றும் பண பட்டுவாடா ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் இதற்கு 13 கோடி பயனர்கள் இருப்பதாகவும், ப்ரீமியம் என்னும் உயர்சேவை பிரிவில் 5 லட்சம் பயனர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் செயலியை பயன்படுத்தும் இந்தியரில் பத்தில் ஒருவர் தங்கள் வங்கி கணக்கை இத்துடன் இணைத்து வருவதாகவும், அறுபது விழுக்காடு பயனர்கள் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகத்தை (UPI) முதன்முறையாக பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ட்ரூகாலர் மொத்த பயனர்களுள் அறுபது விழுக்காட்டினர் இந்தியரே. இந்திய பயனர்களின் தரவுகள் இந்தியாவிலேயே வைக்கப்பட்டுள்ளது என்றும் பெங்களூரு, குருகிராம் (குர்கான்) மற்றும் மும்பையில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் அலுவலகங்களில் மொத்த பணியாளர்களுள் பாதிக்கும் அதிகமானோர் இந்தியரே என்றும் ட்ரூகாலர் தெரிவித்துள்ளது.

"இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தையாகும். இந்திய சந்தையை விரிவாக்குவதற்காக பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து வருகிறோம். பயனர்களின் வாழ்க்கை முறையை எளிதாக்க இந்த புதுமுயற்சிகள் உதவும்," என்று ட்ரூகாலர் நிறுவனத்தின் உடன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆலன் மாமேடி தெரிவித்துள்ளார்.

More News >>