உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை புறக்கணிப்பதை விட, எதிர்த்து கெத்து காட்டி வெளியேற்ற வேண்டும் - சுனில் கவாஸ்கர் கருத்து!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிப்பதை விட அந்த அணியை தோற்கடித்து வெளியேற்றுவதே மேலானது என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கனவே 2007 முதல் இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் தொடரில் பங்கேற்பதில்லை. அனைத்து நாடுகளும் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் பங்கேற்று வருகின்றன.
தற்போது புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக வரும் மே , ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் சுழல்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் வாரியமும் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில், உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை புறக்கணித்தால் லாபம் அந்த அணிக்குத் தான். அதனால் அந்த அணி அடுத்த ரவுண்டுக்கு முன்னேறும் வாய்ப்பாகி விடும். அதற்கு மாறாக அந்த அணியை நாம் தோல்வியடையச் செய்து வெளியேறச் செய்வதே சிறந்தது. மேலும் இரு நாட்டுப் பிரச்னை என்பதால் பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதிக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்பது தான் இந்திய மக்கள் மற்றும் அரசின் கருத்து என்றால் நானும் நாட்டின் பக்கமே இருப்பேன் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.