5 வருடங்களில் 1000 குழந்தைகள் உயிரிழப்பு - அதானி மருத்துவமனையைச் சுற்றும் சர்ச்சை!
அதானி தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில், கடந்த 5 வருடங்களில் 1000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குஜராத் மாநில அரசு அதிர்ச்சிகரணமான அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைவதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக குஜராத்தின் துணை முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் படேல் பேரவையில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ``குட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் நகரில் அதானி அறக்கட்டளைக்கு சொந்தமான ஜிகே பொது மருத்துவமனை யில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1018 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் பல்வேறு நோய்கள் காரணமாக 188 குழந்தைகள் 2014-15ஆம் ஆண்டிலும் 187 குழந்தைகள் 2015-16 ஆம் ஆண்டிலும், 208 குழந்தைகள் 2016-17ஆம் ஆண்டிலும், 276 குழந்தைகள் 2017-18ஆம் ஆண்டிலும், 159 குழந்தைகள் 2018-19ஆம் ஆண்டிலும் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளில் தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்னைகளால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணித்துள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படியே ஜி.கே. மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாக குறிப்பிட்ட நிதின் படேல், குழந்தைகள் மரணம்குறித்து அரசு ஆய்வுக் குழு அமைத்து ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டது" எனவும் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.