`இனி நான் டெஸ்ட் வீரர் அல்ல - டி20 போட்டியில் கன்னி சதம் அடித்த புஜாரா!

டி20 போட்டியில் முதல் சதம் அடித்து இனி நான் டெஸ்ட் வீரர் கிடையாது எனக் கூறும் வகையில் அதிரடி காட்டியுள்ளார் இந்திய வீரர் புஜாரா.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்க முக்கிய காரணமாக இருந்தவர் புஜாரா. இந்த டெஸ்ட் தொடர் மட்டுமல்ல சமீபகாலமாகவே இந்திய அணிக்கு பல டெஸ்ட் தொடர்களில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டி வீரராக மட்டுமே கருதப்பட்டு வந்தார். அவரால் ஐ.பி.எல் போன்ற டி-20 போட்டியில் ரன்களைச் சேர்க்க முடியாது என்று பலரும் கூறினர். இதனால் இந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க தன்னை டெஸ்ட் வீரர் எனக் கூறுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் புஜாரா.

டி20 போட்டிகளிலும் தன்னால் அதிரடியாக பேட் செய்ய இயலும் என்பதை தனது பேட்டிங்கால் உணர்த்தியுள்ளார். சையத் முஷ்டாக் அலி ட்ராபி டி-20 தொடரில் புஜாரா செளராஷ்ட்ரா அணிக்காக விளையாடி வருகிறார். இந்தூரில் நடைபெற்ற போட்டியில் செளராஷ்ட்ரா - ரயில்வே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தான் ஒரு டெஸ்ட் வீரர் மட்டும் இல்லை என்பதை காட்டியுள்ளார். இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய புஜாரா, வழக்கத்துக்கு மாறாக புஜாரா அதிரடியாக விளையாடினார்.

29 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 61 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும். டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் கன்னி சதம் இதுவாகும். ஆம், அவருக்கு இது தான் டி20 போட்டிகளில் முதல் சதம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால் புஜாரா சதம் அடித்தபோதும் அவரின் சவுராஷ்டிரா அணி தோல்வியை தழுவியது. ரயில்வே அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டு இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

More News >>