மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி? 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு வழங்க விஜயகாந்த் திடீர் அறிவிப்பு!

அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிக நிலை இழுபறியாக, 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் தேமுதிக தனித்துப் போட்டியிடப் போகிறதா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைத்து விட வேண்டும் என்பதில் பாஜக பெரும் அக்கறை காட்டுகிறது. ஆனால் பாமகவுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று கூறி, அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை கூடுதலாக சீட் கேட்டு தேமுதிக முரண்டு பிடிக்கிறது. அதிமுகவோ 5 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று கூறுவதால் பேச்சுவார்த்தை இழுபறியாகிக் கிடக்கிறது.

இந்நிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இன்று நடிகர் ரஜினிகாந்த் என விஜயகாந்தை அடுத்தடுத்து சந்திக்க தேமுதிகவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் கூட்டணியே வேண்டாம் என்ற முடிவுக்கு விஜயகாந்த் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை வழங்கலாம் எனவும் விஜயகாந்த் திடீரென அறிவித்துள்ளார். நாளை மறுநாள் முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை விருப்ப மனு வழங்கலாம் என்றும் கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ 10 ஆயிரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இந்தத் திடீர் அறிவிப்பால் தேமுதிக தனித்துப் போட்டியிடப் போகிறதா? அல்லது கூட்டணிப் பேரத்தை அதிகப்படுத்தவா? என்ற பரபரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

More News >>