5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூடாது: வைகோ வலியுறுத்தல்
5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவே கூடாது என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு கொண்டுவந்து, மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்று சட்டத் திருத்தம் செய்ய முனைந்தபோது, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தன. அதனால், இந்தப் பொதுத் தேர்வைக் கொண்டு வருவது அந்தந்த மாநிலங்களின் விருப்பம் என மாற்றம் செய்து, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போதைய மாநில அரசின் முன்னாள் கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அவர்கள், ‘இந்தப் பொதுத் தேர்வைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என்று தொடர்ந்து கூறி வந்தார்.
ஆனால் திடீர் திருப்பமாக, தமிழக அரசின் நீண்டகால கொள்கை முடிவை மாற்றி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவரும் முயற்சியை தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருவதாக அறிகிறோம். ஏற்கனவே நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த மத்திய அரசு, தற்போது சின்னக் குழந்தைகளுக்கும் பொதுத் தேர்வைக் கொண்டுவந்து வடிகட்ட நினைப்பதைப் புறக்கணிக்க வேண்டிய தமிழக அரசு, மாநில அரசுக்கு முடிவு எடுக்கும் உரிமை இருந்தும்கூட, மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க இந்தப் பொதுத் தேர்வை அமுல்படுத்த முனைவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளின் கற்றல் பெரும்பாலும் பெற்றோர்களின் அரவணைப்பில்தான் நடைபெறுகின்றது. மலைவாழ் மாணவர்களுக்கும், கிராமத்தில் வாழும் விவசாய கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், அந்தக் கற்றல் அரவணைப்பு பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பும், கற்றல் சூழலும் உள்ள பள்ளிகளை அரசு உருவாக்கவில்லை. இது அரசின் குற்றமே அல்லாமல், மாணவர்களின் குற்றம் அல்ல.
பிஞ்சுக் குழந்தைகளின் கற்றல் நிலைக்கு, குடும்பச் சூழலும், பள்ளிச் சூழலும்தான் காரணமே தவிர, குழந்தை காரணம் அல்ல. ஆனால் அதன் சுமையை, விளைவை குழந்தைகளின் மேல் திணிப்பது கொடுமையான வன்முறை ஆகும். தற்போதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு இல்லாத நிலையில், பல தனியார் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை நன்றாக உள்ளது என்றால், அதற்குக் காரணம் பள்ளி நடத்தும் முறையே அன்றி, பொதுத்தேர்வு அல்ல.
இன்றைக்கு 9 ஆம் வகுப்புக்குப் பிறகு கடும் மன அழுத்தத்தோடுதான் மாணவர்கள் படிக்க வைக்கப்படுகின்றார்கள். இனி இது 4 ஆம் வகுப்பில் இருந்தே தொடங்கிவிடும். அப்போதிருந்தே மதிப்பெண்ணைக் கேட்கத் தொடங்கி, அந்த மாணவனின் அற்புதமான குழந்தைப் பருவத்தை புத்தகத்துக்கு உள்ளேயே முடக்கி விடுவர். விளையாட்டு, உடற்பயிற்சி என அனைத்தையும் இழந்து விடுவார்கள். தமிழக அரசின் இந்த முடிவுக்கு, கல்வியாளர்கள் உட்பட பலரின் எதிர்ப்புக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், இந்த ஆண்டு இதனை அமுல்படுத்த மாட்டோம், அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிக்கப் போவதும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தப் போவதுமான இந்தப் பொதுத்தேர்வு நடைமுறையை, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எந்த ஆண்டும் கொண்டுவர மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.