`அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங் தான் - விஸ்வாசம் வசூல் சாதனையால் நெகிழும் தயாரிப்பாளர்!

சிவாவுடன் அஜித் இணைந்த நான்காவது படம், 'விஸ்வாசம்'. `வீரம்' படத்தைத் தொடர்ந்து கிராமத்து ஸ்டைலில் மீண்டும் அஜித் நடித்ததால் ரசிகர்கள் படத்தை ஒரு திருவிழாபோல கொண்டாடினர். தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் என்பதால், படம் ரசிகர்களைக் கடந்து ஃபேமிலி ஆடியன்ஸ் வரை ரீச்சாகியது. இதனால் விஸ்வாசம் படத்துக்கு தமிழகத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது. வெளியாகி ஏழு வாரத்துக்கு மேலாக 110 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

இந்த படத்தால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. படத்தின் வசூல் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தன. ரசிகர்கள் ட்விட்டரில் சண்டை எல்லாம் போட்டனர். ஆனால் உண்மையான வசூல் நிலவரம் தெரியாமலே இருந்தது. இந்தநிலையில், தற்போது படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், ``இந்தப் படம் தான் என் வாழ்நாளிலேயே சிறந்த படம். இந்தப் படம் அடைந்துள்ளது சாதாரண வெற்றி அல்ல. பிளாக்பஸ்டர் வெற்றி. இந்த ஹிட்டுக்கான பாராட்டுகள் அனைத்தும் அஜித், இயக்குநர் சிவா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் செல்ல வேண்டும். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது மட்டுமே ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும்.

படத்தின் கரு குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்தது. பல்வேறு கடும் நெருக்கடி, போட்டிகளுக்கு மத்தியில் 600 திரையரங்குகளில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இன்றளவும் படம் நூறு தியேட்டர்களில் ஓடுகிறது. அஜித்தை எப்போது ஓப்பனிங் கிங் என்றுதான் அழைக்கிறோம். அவருக்கான ரசிகர்கள் ஏராளம். தமிழகம் முழுவதும் நான் சென்று பார்த்ததில் ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டாலும்கூட அவருக்கான ரசிகர் வட்டம் குறையவேயில்லை" என்று நெகிழந்தார்.

More News >>