`வீட்டுக்கு பெண் கேட்டு சென்றும் சம்மதிக்கவில்லை - ஒருதலை காதலால் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் வைத்து ஆசிரியை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா குறிஞ்சிப்பாடி கடை வீதியில் உள்ள காயத்ரி மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யாவை அதேபகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை ரம்யாவிடம் கூறியும் உள்ளார். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ரம்யா வீட்டுச் சென்ற ராஜசேகர், அங்கு அவரை பெண் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவரது வீட்டார் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ஆசிரியை ரம்யா வகுப்பறைக்கு பாடம் எடுக்க சென்றுள்ளார். அங்கு வந்த ராஜசேகர் தன்னை திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் வகுப்பறையில் வைத்தே ரம்யாவை அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். மாணவர்கள் முன்பு வகுப்பறையில் வைத்தே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீஸார் ஆசிரியையின் உடலை கைப்பற்றி, உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததுடன் ராஜசேகரை தேடி வருகின்றனர். மேலும் அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.