பாமகவுடன் தேமுதிகவை ஒப்பிடுகிறோமா? - கூட்டணி குறித்து பிரேமலதா பதில்!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சைப்பெற்றுத் திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் புதிய திருப்பமாக விஜயகாந்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் கூடுதல் இடங்களைக் கேட்டு அடம்பிடிக்கிறது தே.மு.தி.க. இன்னொரு பக்கம் தினகரனுடன் கூட்டணி சேர வேண்டும் என விஜயகாந்தை திருநாவுக்கரசர் வலியுறுத்துகிறார். இப்படியான நிலைக்கு மத்தியில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜயகாந்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். ``சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``நானும் அவரும் நீண்டகால நண்பர்கள். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன். கருணாநிதி மீது பாசம், அன்பு கொண்டிருந்தார். கலைஞர் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்த காரணத்தால் விஜயகாந்த்தால் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றாலும் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுப் பேசினார். தற்போது சிகிச்சை முடிந்து நல்ல நிலையில் உடல்நலம் தேறி வந்திருக்கிறார். இன்னும் ஆரோக்கியமாக இருந்து நாட்டுக்குப் பாடுபட வேண்டும் எனப் பாராட்டுகளை தெரிவித்து வந்திருக்கிறேன்" என்றார்.
இதற்கிடையே, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், ``கூட்டணிகுறித்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் போய் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி கிடையாது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் கூட்டணிகுறித்த முடிவு அறிவிக்கப்படும். முடிவை கேப்டன் அறிவிப்பார்’ என்று தெரிவித்தவரிடம், பாமகவை ஒப்பிட்டு அதிக இடங்களைக் கேட்கிறீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``எந்தக் கட்சியுடனும் எங்களை ஒப்பிடவில்லை. எங்களின் பலம் என்ன, வாக்கு வங்கி சதவிகிதம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு நல்ல முடிவை ஒரு வாரத்தில் கேப்டன் அறிவிப்பார்" என்றார்.